பின்னலாடை நகரம் இனி வானூர்தி நகரம்!

1 mins read
815cf2da-14e1-4810-81e6-c5b77ffdc6ef
இந்தியாவிலேயே முதன்முறையாக பயிற்சி விமானத் தொழிற்சாலை திருப்பூரில் வருகிறது. - படம்: இந்திய ஊடகம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சக்தி ஏர்கிராப்ட் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி விமானத் தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.500 கோடியில் ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் முயற்சியில் முக்கியமான முன்னேற்றமாக, அரசு சக்தி ஏர்கிராஃப்ட் இன்டஸ்ட்ரி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், திருப்பூர் மாவட்டத்தில் இந்தியாவில் முதன்முறையாக 2 அல்லது 4 இருக்கைப் பயிற்சி விமானங்களைத் தயாரிக்கும் தனித்துவமான தொழிற்சாலை நிறுவப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்காக சுமார் ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இது திருப்பூரில் உயர்நிலை தொழில் வளர்ச்சிக்கு ஒரு பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

தற்போது நெசவு, ஏற்றுமதி துறைகளுக்காக பிரபலமான திருப்பூர், இந்தத் திட்டத்தின் மூலம் விமான உற்பத்தித் துறையிலும் முக்கிய இடம் பெற உள்ளது.

இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1,200 உயர்நிலை வேலை வாய்ப்புகள் உருவாகும். இதில் வான்வழி பொறியியல், வடிவமைப்பு, சோதனை, தரச் சான்றிதழ், தொழிற்சாலை இயக்கம் உள்ளிட்ட பல துறைகளில் நிபுணர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த வேலை வாய்ப்புகள், திருப்பூர், அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கு பெரும் வாய்ப்பாக இருக்கும். மேலும், விமான உற்பத்தி தொடர்பான புதிய திறன்களை உருவாக்கும் வகையில் பயிற்சிகளும் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்