புதுடெல்லி: இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் அடுத்த கடற்படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முப்படைத் தலைமைத் தளபதி, கடற்படைத் தலைமைத் தளபதி என இரு ராணுவ உயர் பதவிகளுக்கான உத்தரவுகளை இந்தியப் பாதுகாப்பு அமைச்சு சனிக்கிழமை (மே 9) வெளியிட்டது. இருவரும் மே மாத இறுதியில் புதிய பொறுப்புகளை ஏற்பர்.
ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முப்படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
அப்பதவியை வகிக்கும் ஜெனரல் அனில் சௌகான் மே 30ஆம் தேதி ஓய்வுபெறுவதால், ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி அப்பதவியை ஏற்கிறார்.
நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், போர்க்காலங்களில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட பதவி இது.
என்.எஸ். ராஜா சுப்ரமணி, பதவியேற்ற நாள் முதல் மறு உத்தரவு வரும்வரை, இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறைச் செயலராகவும் கூடுதலாகப் பணியாற்றுவார் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
இந்தியப் பாதுகாப்பு மன்றத்தில் ராணுவ ஆலோசகராக 2025 முதல் பணியாற்றிவரும் லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, 1985ல் ‘தி கர்வால் ரைபிள்ஸ்’ பிரிவில் ராணுவ அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
ராணுவத் தலைமைத் துணைத் தலைவர், மத்திய தளபத்தியப் பிரிவின் தலைமைத் தளபதி உள்ளிட்ட ராணுவத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள இவர், ஏறக்குறைய 40 ஆண்டுகால அனுபவம் கொண்டவர்.
விசிஷ்த் சேவா பதக்கம், அதி விசிஷ்த் சேவா பதக்கம், சேனா பதக்கம், பரம் விசிஷ்த் சேவா பதக்கம் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.
தேசிய பாதுகாப்புக் கல்விக்கழகம் (NDA), இந்திய ராணுவக் கல்விக்கழகத்தில் (IMA) இளநிலைப் பட்டக் கல்வியும் பின்னர் டெல்லி, லண்டனில் உயர்கல்வியும் பயின்ற இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார்.
துணை அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன்
இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதியாக பணியாற்றி வரும் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி இம்மாத இறுதியில் ஓய்வுபெறுவதையடுத்து, அப்பொறுப்பை மேற்கு மண்டலக் கடற்படைப் பிரிவுத் தலைமைத் தளபதியாக உள்ள துணை அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் ஏற்கவுள்ளார்.
இவர் மே 31ஆம் தேதி பொறுப்பேற்பார் என்றும் அவரது பதவிக்காலம் 2028 டிசம்பர் 31ஆம் தேதிவரை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு மண்டலக் கடற்படைப் பிரிவின் 34வது தலைமைத் தளபதியாக 2025ல் பொறுப்பேற்ற திரு கிருஷ்ண சுவாமிநாதன், 1987ல் இந்தியக் கடற்படையில் அதிகாரியாகப் பொறுப்பெற்றார். இவர் தகவல் தொடர்பு, மின்னணுப் போர்முறையில் நிபுணத்துவம் பெற்றவர்.
திரு கிருஷ்ண சுவாமிநாதன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம், கொச்சி அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு முதுகலை அறிவியல் பட்டம், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்பு ஆய்வுகளில் முதுகலைப் பட்டம், மும்பை பல்கலைக்கழகத்தில் வியூக ஆய்வுகளில் முதுகலை ஆய்வியல் பட்டம், அனைத்துலக ஆய்வுகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
கடற்படைப் பாதுகாப்பு, செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய திரு சுவாமிநாதன், மேற்கு மண்டலக் கடற்படைத் தளபதியாகவும் பணியாற்றியவர். இவரது மகத்தான சேவையைப் பாராட்டி இந்திய அரசு ‘பரம் விசிஷ்த் சேவா’ உள்ளிட்ட உயரிய விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

