கூகல் மீட் கோளாறு: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

1 mins read
f0d6f8ab-8df8-43df-9620-34e8b0e5746a
கூகல் மீட் சின்னம். - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவில் கூகல் மீட் தளத்தில் பெரிய அளவில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது.

அதன் காரணமாக புதன்கிழமை (நவம்பர் 26) ஆயிரக்கணக்கானோரால் காணொளி அழைப்புகளில் சேர்ந்துகொள்ள முடியாமல் போனது. இதனால், பலர் திட்டமிட்டிருந்த வேலைச் சந்திப்புகள், இணையம்வழி நடத்தப்படும் வகுப்புகள், நேர்காணல்கள் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இணையத்தளச் சேவைக் கோளாறுகளைப் புகார்களைக் கணக்கிடும் இணையத்தளமான டௌன்டிடெக்டர் (Downdetector), உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 1.55 மணி அளவில் சுமார் 1,760 பேர் கூகல் மீட்டில் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகப் புகார் கொடுத்திருந்தனர்.

அவர்களில் 63 விழுக்காட்டினர், கூகல் மீட் இணையத்தளமே வேலை செய்யவில்லை என்று கூறியிருந்தனர். 35 விழுக்காட்டினர் மற்ற சர்வர் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டனர்.

சுமார் மூன்று விழுக்காட்டினர், கூகல் மீட்டில் காணொளித் தரம் சரியாக இல்லை என்று தெரிவித்திருந்தனர். கூகல் மீட் வழி சந்திப்புகளில் பங்கேற்க முயன்றோர் ‘502’ கோளாற்றுக் குறிப்பைக் கண்டனர்.

ஆத்திரமடைந்த சமூக ஊடகப் பயனர்கள் பலர், இப்பிரச்சினை பெரிய அளவில் காணப்பட்டதா என்று கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வந்தனர். பலர் அக்கறை தெரிவித்ததுடன் கிண்டலும் செய்தனர்.

சேவைத் தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கூகல் ஆகக் கடைசி நிலவரப்படி அதிகாரபூர்வத் தகவல் எதையும் வெளியிடவில்லை.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்புதான் கிளவுட்ஃபேர் தளத்துடன் தொடர்புடைய கோளாற்றால் இணையத்தில் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்