ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதன்முறையாக சுண்ணாம்புக்கல் கனிமத் தொகுதிகளுக்கான ஏலம் தொடங்கியது.
இந்நிகழ்வுக்கு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தலைமை தாங்க, முதல்வர் உமர் அப்துல்லா, துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, மத்திய, மாநிலப் பங்காளித்துவத்தையும் வட்டார அளவிலான இந்த முயற்சி அதன் உத்திபூர்வ முக்கியத்துவத்தையும் பிரதிபலிப்பதாக துறைசார் நிபுணர்கள் தெரிவித்தனர்.
அனந்த்நாக், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் சுமார் 314 ஹெக்டேர் பரப்பளவில் மொத்தம் ஏழு சுண்ணாம்புக் கல் தொகுதிகள் ஏலத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முயற்சியானது வேலைவாய்ப்பு உருவாக்கம், வருவாய் வளர்ச்சி, தொழில்துறை விரிவாக்கம் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு புதிய பொருளியல் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு, காஷ்மீரின் வளர்ச்சிப் பாதையை முன்னேற்றுவதோடு, ‘விக்ஸித் பாரத் 2047’இன் தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கும் என்று கூறப்படுகிறது.
“இந்த ஏல நடவடிக்கையானது, 2015ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு, ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட சுரங்க சீர்திருத்தங்களை முன்னேற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
“இந்த சீர்திருத்தங்களுக்குப் பிறகு யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் முதல் சுரங்கத் தொகுதி ஏலமும் இதுவாகும்.
தொடர்புடைய செய்திகள்
“இது கனிமத் துறையில் வெளிப்படைத்தன்மை, போட்டித்தன்மை, நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது,” என்றும் சுங்கரதுறை அமைச்சு மேலும் தெரிவித்தது.


