போபால்: இந்தியாவில் குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், விளைநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி, நாட்டில் பயிர்க்கழிவுகளை எரிப்பதில் மத்தியப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் பயிர்க் கழிவு எரிப்புச் சம்பவங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் கண்காணித்து வருகிறது.
அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 17 வரையிலான காலகட்டத்தில், மத்தியப் பிரதேசத்தில் 354 பயிர்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் (187 சம்பவங்கள்) ஒப்பிடுகையில் இருமடங்கு உயர்வாகும்.
2024இல் அங்கு 262 சம்பவங்கள் பதிவாகி இருந்த நிலையில், தற்போது அம்மாநிலத்தில் கழிவுகளை எரிப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதை இத்தரவுகள் காட்டுகின்றன.
வழக்கமாக இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் மாநிலம், தற்போது 220 சம்பவங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. இதில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான சம்பவங்கள் அமிர்தசரஸ், தரன்தரன் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டுமே நடந்துள்ளன. விதிகளை மீறியதற்காக இவ்விரு மாவட்ட ஆட்சியர்களுக்கும் காற்றுத்தர மேலாண்மை ஆணையம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் 134 சம்பவங்களும் உத்தராகண்டில் 24 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதேவேளையில், ஹரியானா மாநிலத்தில் வெறும் எட்டு சம்பவங்கள் மட்டுமே பதிவாகி மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் சூழலில், மத்தியப் பிரதேசத்திலும் வைக்கோல் எரிப்பது தீவிரமடைந்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
