மதுபானப் போத்தல்களில் மகாத்மா காந்தி படம்

1 mins read
f0028d7d-84a4-49d9-a20a-5c3ed4e84bc2
ரஷ்ய நிறுவனத்தின் மதுபானப் போத்தலில் இருக்கும் மகாத்மா காந்தி படம். - படம்: எக்ஸ் தளம்

புதுடெல்லி: ரஷ்ய நிறுவனமான ரேவோர்ட் தயாரித்த மது போத்தல்களில் மகாத்மா காந்தி படம் இடம் பெற்றுள்ளது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்திற்கு இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த ரேவோர்ட் என்ற மதுபானம் தயாரிக்கும் நிறுவனம், பீர் போத்தல்களில் மகாத்மா காந்தி புகைப்படத்தைப் பயன்படுத்தி வந்தது. இதுகுறித்த காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

“மகாத்மா காந்தி மதுபானத்தின் தூதர் அல்ல. இது இந்தியாவையும் 140 கோடி இந்திய மக்களின் மாண்புகளையும் குறைத்து மதிப்பிடும் செயல். இந்த விஷயத்தை ரஷ்ய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனச் சர்ச்சைக்குரிய இக்காட்சியைப் பார்த்த இணையவாசிகள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதேபோன்று, 2019 ஆம் ஆண்டு இஸ்ரேலின் 71வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய மதுபான நிறுவனம் ஒன்று தனது போத்தல்களில் மகாத்மா காந்தியின் படத்தைப் பதிப்பித்தற்காக விமர்சனங்களை எதிர்கொண்டது.

பின்னர், அதற்கு மன்னிப்பும் கோரியது.

அதே ஆண்டு, செக் மதுபான நிறுவனம் ஒன்று அதன் தயாரிப்புக்கு ‘மகாத்மா இந்தியா பேல் ஏல்’ எனப் பெயரிட்டிருந்தது. அதற்குக் கண்டனம் எழவே அந்தப் பெயரை அந்நிறுவனம் மாற்றிவிட்டது.

குறிப்புச் சொற்கள்