கோரக்பூர்: விருந்து நிகழ்ச்சியின்போது தம்மை ‘குண்டு’ எனக் கிண்டல் செய்த இருவரைத் துப்பாக்கியால் சுட்ட ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை (மே 8) நடந்தது.
சம்பவம் குறித்து மறுநாள் புகார் அளிக்கப்பட, துப்பாக்கிச்சூடு நடத்திய ஆடவர் அன்றே கைதுசெய்யப்பட்டார்.
கஜ்னி நகரின் பேல்காட் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூன் சௌகான். அவர் தம் உறவினர் ஒருவருடன் சில நாள்களுக்குமுன் அங்கு நடந்த சமூக விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது, அனில் சௌகான், சுபம் சௌகான் என்ற இருவரும் அர்ஜூன் குண்டாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, கிண்டல் செய்ததாகக் கூறப்பட்டது.
“அதனால் ஆத்திரமடைந்த அர்ஜூன், ஆசிஃப் கான் என்ற தம் நண்பருடன் சேர்ந்து, நெடுஞ்சாலையில் காரில் சென்ற அனிலையும் சுபத்தையும் பின்தொடர்ந்தனர். அவர்களின் காரை இடைமறித்து, இருவரையும் காரிலிருந்து இழுத்துப்போட்டு, அவர்களைச் சுட்டபின் அர்ஜூனும் ஆசிஃபும் அங்கிருந்து தப்பியோடினர்,” என்று காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் விவரித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வழிப்போக்கர்கள், அனிலையும் சுபத்தையும் மீட்டு, மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டனர்.
சுபத்தின் தந்தையார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டு, அர்ஜூனும் ஆசிஃபும் கைதுசெய்யப்பட்டனர்.

