மும்பை: இந்தியாவில் நிலவும் துடிப்பான ஜனநாயகமும் நம்பகத்தன்மையும்தான் உலகளவில் அதன் சிறப்பம்சங்களாக கருதப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த கடல்சார் நிபுணர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், கப்பல் கட்டுமானத்தில் புதிய உயரங்களை எட்டுவதற்கான முயற்சிகளை இந்தியா வேகப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், உலகளாவிய பதற்றங்கள், வர்த்தக இடையூறுகள், மாறிவரும் விநியோகத் தொடர்களுக்கு மத்தியில் இந்தியா ஒரு நிலையான கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என்றார் திரு மோடி.
இந்தியக் கடல்சார் துறையை வலுப்படுத்த 2.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது, இந்தியாவின் வளர்ச்சிக்குக் கடல்சார் துறையானது உந்துசக்தியாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.
“இன்று இந்திய துறைமுகங்கள் வளரும் நாடுகளில் மிகவும் நவீனமான, மேம்பட்ட திறன் கொண்டவையாக கருதப்படுகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டு அதிக சரக்குகளைக் கையாண்டு இந்திய துறைமுகங்கள் புதிய சாதனை படைத்துள்ளன. பல அம்சங்களில், வளர்ந்த நாடுகளைவிட இந்திய துறைமுகங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன,” என்றார் பிரதமர் மோடி.
இம்மாநாட்டையொட்டி, கப்பல் துறையிலும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மொத்தம் 85 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் பங்கேற்றிருப்பது, அவர்களின் பொதுவான உறுதிப்பாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
“கடல்சார் துறை மிக வேகமாகவும் ஆற்றலுடனும் முன்னேறி வருகிறது. கடல்சார் மனித வளங்களில் இந்தியா வேகமாக வளர்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த பத்தாண்டுகளில் இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை 1.25 லட்சத்திலிருந்து மூன்று லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. தற்போது, மாலுமிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை உலகளவில் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது,” என்றார் பிரதமர் மோடி.


