புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் தேர்தல் முறைகேடுகள் குறித்து முறையிட்டும் ‘இண்டியா’ கூட்டணித் தலைவர்கள் அதிபர் திரௌபதி முர்முவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 10 பேர் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் குழு இச்சந்திப்பில் பங்கேற்றது.
அப்போது, எதிர்க்கட்சிகள் சார்பில் நான்கு முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனு அதிபரிடம் அளிக்கப்பட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் செயல்பாடுகளில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்தல்கள் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
டெல்லியில் கடந்த மூன்று நாட்களாகத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
வாக்குத் திருட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் நடப்பதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அதிபர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.
மனுவை பெற்றுக் கொண்ட அதிபர் முர்மு, கோரிக்கைகள் குறித்துப் பரிசீலிப்பதாகவும் சில கூடுதல் ஆதாரங்கள் கேட்டிருப்பதாகவும் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ராகுல் காந்தி.
தேர்தல் வெளிப்படைத்தன்மைக்கான தங்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
