சென்னை: “கனிமவளக் கொள்ளையைத் தடுப்பதில் மாநில அரசின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை,” என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்தவர் நடேசன். இவர், நெக்குந்தி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரித் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், சி. குமரப்பன் அடங்கிய அமர்வில் புதன்கிழமை (டிசம்பர் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான சுரங்கத்துறை இயக்குநர் டி. மோகனிடம், “தமிழகத்தில் தொடரும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த இயக்குநர், “கனிம வளங்களை எடுப்பதற்கு ஆன்லைன் பதிவு முறை, ஜி.பி.எஸ். கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
“சட்டவிரோதமாகச் செயல்படுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “கனிம வளங்களைக் கொள்ளையடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டும் போதாது; அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளங்கள் நாட்டின் கட்டமைப்பிற்கு மிக முக்கியமான சொத்து. அவற்றைச் சூறையாட ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
“கனிமவளக் கொள்ளையர்களுக்கு உடந்தையாகச் செயல்படும் அதிகாரிகள் மீது இதுவரை ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை? அரசு அதிகாரிகளே இவ்வாறு செயல்பட்டால் கனிமவளத் திருட்டைத் தடுக்கவே முடியாது.
தொடர்புடைய செய்திகள்
“இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை தேவை. ஆனால், அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. இதை இப்படியே அனுமதித்தால் பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கும்,” என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

