ஆசையாக வளர்த்த கிளியைக் காப்பாற்றப் போன உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்

1 mins read
83c8f1e8-f8c0-4932-b557-59654d739964
மக்காவ் கிளியுடன் அருண் குமார். - படம்: இந்து தமிழ் திசை

பெங்களூரு: பெங்களூருவில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள மக்காவ் ரகக் கிளியைக் காப்பாற்ற முயன்ற தொழிலதிபர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு, கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார், 32. தொழிலதிபரான இவர், அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பறவைகள் மீது ஆர்வம் கொண்ட இவர், தென் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள ‘மக்காவ்’ ரகக் கிளியை மிக ஆசையாக வளர்த்து வந்தார்.

இரண்டு நாள்களுக்குமுன் வீட்டிலிருந்து பறந்து சென்ற அந்தக் கிளி, வீட்டின் அருகே இருந்த உயர் அழுத்த மின்கோபுரத்தின் மீது சென்று அமர்ந்தது. தான் ஆசையாக வளர்த்த கிளிமீது மின்சாரம் பாய்ந்து இறந்துவிடுமோ என அருண் குமார் அஞ்சினார்.

உடனடியாக ஒரு நீண்ட இரும்புக் கம்பியால் கிளியை அங்கிருந்து அகற்ற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பி, மேலே இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து அருண் குமார் தூக்கி வீசப்பட்டார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அருண் குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்லப் பறவையைக் காப்பாற்ற முயன்று உரிமையாளரே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்