புதுடெல்லி: இந்தியக் கடற்படை தன்னிறைவு, நவீனமயமாக்கலை நோக்கி முன்னேறி வருவதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளதாக, இந்தியக் கடற்படை தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் கடற்படை வீரர்கள் அனைவரும் அசாதாரண துணிச்சல், உறுதி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கின்றனர். நாட்டின் கடலோரங்களையும், கடல் வர்த்தக நலன்களையும் திறம்பட பாதுகாத்து வருகின்றனர்.
“அண்மைய ஆண்டுகளில், இந்தியக் கடற்படை தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கல் ஆகிய இரண்டையும் நோக்கி முன்னேறி வருவது பெருமை அளிக்கிறது,” என்றார் பிரதமர் மோடி.
இந்த ஆண்டு தீபாவளியை ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் கொண்டாடிய தருணத்தை மறக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், இந்தியக் கடற்படையின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.
வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பது, நீலப் பொருளியலை வலுப்படுத்துவது முதல் மனிதாபிமானப் பணிகளை வழிநடத்துவது வரை, இந்தியக் கடற்படை ஒழுக்கம், இரக்கம் மற்றும் பொறுப்பை உள்ளடக்கியது என அதிபர் திரௌபதி முர்மு தமது சமூக ஊடகப் பதிவில் எடுத்துரைத்தார்.
துணை அதிபர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்தியக் கடற்படை நாட்டின் கடல்சார் வலிமை, விழிப்புணர்வு மற்றும் அதன் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது.
கடற்படை தினத்தை முன்னிட்டு தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய உள்நாட்டு கடற்படை சக்தியாக இந்தியா உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியக் கடற்படையானது, கடல்சார் நலன்களை வீரம், விழிப்புணர்வு, அர்ப்பணிப்புடன் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய நாட்டின் பயணத்தை நங்கூரமிடுவதாகவும் சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் வெளிப்படுத்திய உயர் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு, நாட்டின் தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாக்க கடற்படை தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை அளிக்கிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

