தென்னாப்பிரிக்கக் கலைநிகழ்ச்சிகள் குறித்துப் பிரதமர் மோடி தமிழில் பதிவு

1 mins read
ab7d226d-1d4c-43ec-999b-9736df3334b9
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புலம்பெயர்ந்த இந்தியர்களின் உற்சாகமான பண்பாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார். - படம்: பிஐபி

புதுடெல்லி: இந்தியாவுடனான பண்பாட்டுத் தொடர்பை நிலைநிறுத்தி உயிர்ப்புடன் வைத்திருப்பதில் புலம்பெயர்ந்தோரின் உணர்வை பாராட்டுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடகத்தில் அவர் தமிழில் பதிவிட்டுள்ளார்.

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, புலம்பெயர்ந்த இந்தியர்களின் உற்சாகமான பண்பாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார். பிள்ளையார் வழிபாடு, சாந்தி மந்திரத்துடன், தமிழில் ஒரு பாடலை இசைத்து அவருக்கு இந்திய வம்சாவளியினர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின் பேசிய திரு மோடி, “பல ஆண்டுகளுக்குமுன் தென்னாப்பிரிக்கா வந்தவர்களின் நம்பிக்கையையும் மனப்பான்மையையும் இந்தப் பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்க்கையில் அவர்கள் ஏராளமான துன்பங்களைச் சந்தித்தனர்,” என்றார்.

ஆனால், அது அவர்களின் ஊக்கத்தைக் குலைக்கவில்லை என்றும் பாடல்கள், வேண்டுதல்கள் மூலம் அவர்கள் தங்கள் இதயங்களில் இந்தியாவை உயிர்ப்புடன் வைத்திருந்தனர் என்றும் அவர் கூறினார்.

“இந்தப் பண்பாட்டுத் தொடர்பு உயிரோட்டமாக இருப்பதைக் காண்பது மெச்சத்தக்கது.

“இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான பண்பாட்டுத் தொடர்பு உண்மையிலேயே மனத்தைத் தொடும். காலத்தால் அழியாத தொடர்பு. இதுபோன்ற தருணங்கள் நம் மக்களுக்கு இடையேயான வலுவான உறவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன,” என்றார் பிரதமர் மோடி.

குறிப்புச் சொற்கள்