பாரதியார் குறித்து மோடி புகழ்ந்து பேசியது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை: நிரஞ்சன் பாரதி

2 mins read
a06b9332-a3e0-48ee-956f-9c1704c41d65
நிரஞ்சன் பாரதி. - படம்: விகடன்

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் மகாகவி பாரதியார் குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பேசியது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை என பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி தெரிவித்துள்ளார்.

‘வந்தே மாதரம்’ பாடல் எழுதப்பட்ட 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் பேசியபோது பாரதியார், வா.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரைப் புகழ்ந்து பேசினார் பிரதமர் மோடி.

பிரதமரின் இந்தப் பாராட்டை வரவேற்றுள்ள பாரதியாரின் எள்ளு பேரன், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் பாரதியாருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகப் பேட்டி ஒன்றில் குறிபிட்டுள்ளார். அதனால்தான் பாரதியாரை இந்தியப் பிரதமர் புகழ்ந்து பேசியதாகவும் நிரஞ்சன் கூறினார்.

“கடந்த 1905ஆம் ஆண்டு அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க பயன்படுத்தப்பட்ட ஒரே மந்திரம்தான் ‘வந்தே மாதரம்’.

நம் நாட்டை தாயைப் போல் வணங்க வேண்டும் என்பதுதான் இப்பாடலின் பொருள். ‘வந்தே மாதரம்’ பாடல் தமிழக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பாரதியார்தான் என்றும் அப்பாடலை தமிழில் மொழி பெயர்த்தவர் பாரதிதான் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்,” என்றும் நிரஞ்சன் பாரதி தெரிவித்துள்ளார்.

தற்போது பொருளியல் ஆற்றல் நிறைந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. உலகத் தலைவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கும் நாடாகவும் இந்தியா உருப்பெற்று வருகிறது என்றும் நிரஞ்சன் பாரதி தமது பேட்டியில் பாராட்டியுள்ளார்.

பாரதியின் பெருமைகள் குறித்து தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பாரதியாரின் கவிதைகள் துணிவைத் தூண்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாரதியாரின் சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட மேலும் பல தலைவர்கள், பிரமுகர்கள் பாரதியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்