புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் தற்போது ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து பாஜக உறுதியாக நிற்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் மேற்குவங்க பாஜக எம்பிக்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் கடுமையாகப் பாடுபட வேண்டும் என திரு மோடி கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் எனப் பிரதமர் மோடி தங்களிடம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.
பாஜகவினர் துணிச்சலுடன் போராடி வருவதாகப் பிரதமர் பாராட்டினார். அண்மையில் மிகக் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்ட பாஜக தொண்டர் ககன் முர்மு குறித்து விசாரித்த பிரதமர், முர்முவிடம் பேசி அவரை ஊக்குவித்தார்.
இந்தத் துணிச்சல் நீடிக்க வேண்டும் என்றும் வரும் நாள்களில் போராட்டம் நீடிக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் அயராத முயற்சியும் பாராட்டுக்குரியது என்று கூறிய பிரதமர் மோடி, தேவைப்படும் நேரங்களில் பாஜகவினர் மற்றவர்களுடன் கைகோத்து நிற்பதை வரவேற்பதாக குறிப்பிட்டார்.
“பிரதமரைச் சந்தித்தது உற்சாகம் அளிக்கிறது,” என்றார் சுகந்தா மஜும்தார்.
இதனிடையே, மீண்டும் பாபர் மசூதியை கட்டுவேன் என்று அறிவித்த மேற்கு வங்க மாநில திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹூமாயுன் கபீரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முர்ஷிதாபாத் பகுதியில் மசூதியைக் கட்டப்பபோவதாகவும் இதற்காக டிசம்பர் 6ஆம் தேதி அடிக்கல் நாட்டப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தப் பேச்சு மேற்கு வங்கத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்த அறிவிப்பு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் ஆளுநர் சிவி ஆனந்த போஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

