இது மோடியின் போர்: இந்தியாவை விமர்சித்த வெள்ளை மாளிகை ஆலோசகர்

2 mins read
f8b2302c-e916-4a2e-abbd-5335d4809ef5
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவிற்கான இறக்குமதி வரியைக் குறைப்போம் என்கிறார் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: உக்ரேன் - ரஷ்யா இடையேயான மோதலை, ‘இந்தியப் பிரதமர் மோடியின் போர்’ என்று வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியா மீதான வரியை 25% வரை குறைப்போம் என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்தியா உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் பீட்டர் நவரோ வலியுறுத்தினார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதன் மூலம், இரு நாடுகளின் மோதலுக்கு இந்தியா மறைமுகமாக நிதி வழங்கியுள்ளது என்றும் அவர் வெளிப்படையாகச் சாடியுள்ளார்.

இந்தியா குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது, உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பைத் தூண்டிவிடுவதோடு, அமெரிக்க வரி செலுத்துவோர் மீதான சுமையையும் அதிகரிக்கிறது.

மோடி ஒரு சிறந்த தலைவர். இது முதிர்ச்சியடைந்த மக்களால் வழிநடத்தப்படும் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம். ஆனாலும் அமெரிக்காவின் வலியுறுத்தலை அவர்கள் ஏற்கவில்லை,” என்று திரு பீட்டர் நவரோ கூறியுள்ளார்.

ரஷ்யாவுக்கான இந்தியாவின் மறைமுக உதவி காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளிடம் உக்ரேன் நிதியுதவி கோரி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“தனது போரைத் தொடர உக்ரேன் கூடுதல் நிதி கேட்கிறது. இந்தியாவின் இந்தச் செயல்பாட்டால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் இழப்பைச் சந்திக்கிறோம். வரி செலுத்துவோர், மோடியின் போரால் இழப்புகளைச் சந்திக்க விரும்பவில்லை.

“இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் பிடிவாதமாக உள்ளது. எண்ணெய் வாங்குவது தனது இறையாண்மை என இந்தியா கூறுகிறது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்,” என்றார் பீட்டர் நவரோ.

இந்தியப் பொருள்களுக்கான வரியை அமெரிக்கா அதிகரித்த நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி அந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. அதையடுத்து பீட்டர் நவரோவின் கருத்துக்கள் வந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்