மூடிஸ்: இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அதிக பாதிப்பில்லை

1 mins read
2fece8a0-15f6-4a7e-984d-316e0d712f77
வரிவிதிப்பால் மணிக்கற்கள், அணிகலன்கள், மருத்துவக் கருவிகள், ஜவுளி ஆகிய துறைகள் ஆகப் பலமாக அடிவாங்கும் என்று மூடிஸ் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: இந்தியாவின் இவ்வாண்டுக்கான வளர்ச்சி விகிதம் 6.1 விழுக்காடு என நிதித்தரவு ஆய்வு நிறுவனமான மூடிஸ் அனலிட்டிக்ஸ் (Moody’s Analytics) முன்னுரைத்திருக்கிறது.

அமெரிக்க வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, வளர்ச்சி விகிதத்திற்கான தனது முன்னுரைப்பை மூடிஸ் 0.30 விழுக்காடு (அதாவது 30 பேசிஸ் புள்ளிகள்) குறைத்துள்ளது.

“கூடுதல் வரியான 28 விழுக்காட்டு வரி தற்போது 90 நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டாலும் தற்போது நடப்பிலுள்ள 10 விழுக்காடு அடிப்படை நிலை வரிகள் நடப்பில் உள்ளன. வரிகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட பிறகு ஏற்படவிருக்கும் பொருளியல் பாதிப்பின் அடிப்படையில் எங்களது முன்னுரைப்பு திருத்தப்பட்டுள்ளது,” என்று மூடிஸ் அனலிட்டிக்ஸ், இதுபற்றிய தன் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

வரிவிதிப்பால் மணிக்கற்கள் (gems), அணிகலன்கள், மருத்துவக் கருவிகள், ஜவுளி ஆகிய துறைகள் ஆகப் பலமாக அடிவாங்கும் என்றது மூடிஸ்.

இருந்தபோதும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு ஏற்றுமதிகள் சிறு பகுதி மட்டும் வகிப்பதால் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அதிக பாதிப்பில்லை என்றும் அந்நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்