மீரட்: மும்பையின் கோரேகானைச் சேர்ந்த 15 வயது அனம்தா அஹ்மது, தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட உலகின் ஆக வயது குறைந்தவர் என்று அவரது மருத்துவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கியதில் வலது கையை இழந்த அனம்தா அஹ்மதுக்கு, செப்டம்பர் 18 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அலிகாரில் உள்ள தனது வீட்டில் உறவினர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த அவர், தற்செயலாக 11kV வயரைத் தொட்டதால், அவரது இரு கைகளிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அவரது வலது கையில் பின்னர் திசுக்கள் அழிந்து புண் (gangrene) ஏற்பட்டு பலமுறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. கையைத் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது. இடது கையும் அதன்பின் பலத்த காயம் அடைந்தது. அவரது கை குறிப்பிட்ட அளவே செயல்பட முடிந்தது.
மேற்கு இந்திய நகரமான சூரத்தில் மூளைச்சாவு அடைந்த ஒன்பது வயதுச் சிறுமியின் குடும்பத்திடம் இருந்து அனம்தா தானமாக மூட்டைப் பெற்றார்.
மும்பையின் பரேல் பகுதியில் உள்ள க்ளீனிகிள்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் நிலேஷ் சத்பாய் என்பவரால் இந்த மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிட்டது.
கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆக இள வயதுச் சிறுமி, அமெரிக்காவைச் சேர்ந்த சியோன் ஹார்வி. அவருக்கு 10 வயதாக இருக்கும்போது 2017ஆம் ஆண்டு அவருக்கு அமெரிக்காவில் இரு கைகளுக்கும் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று அறுவை சிகிச்சை நிபுணர் கூறினார். எனினும், அந்த மாற்று அறுவை சிகிச்சை முழங்கைக்கு கீழே செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
“உலகில் தோள்பட்டை வரையிலான கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆக இளையவர் அனம்தா. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அவர் குணமடைந்து வருகிறார்,” என்று டாக்டர் சத்பாய் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறினார். தோள்பட்டை அளவிலான மாற்று அறுவை சிகிச்சையின் சிரமங்களை விளக்கிய அவர், காயம் தோள்பட்டைக்கு மேல் வரை இருந்தது என்றார். புதிய மூட்டை இணைக்க ஆரோக்கியமான கட்டமைப்புகள் அவசியம். ஆனால் அனம்தாவின் தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள் யாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை நிபுணர்கள் “கிட்டத்தட்ட மார்புக்கூட்டுக்குள்ளே,” சிகிச்சை செய்ய வேண்டும் என்றார் டாக்டர் சத்பாய். நன்கொடையாளாரின் கையைப் பெற கடுமையான நேர அட்டவணையைப் பின்பற்ற வேண்டியிருந்தது. கை மிகவும் நல்ல நிலையில் இருப்பது முக்கியம். பின்னர், கை, மும்பையின் விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவக் குழு கையைப் பெற்ற ஆறு மணி நேரத்திற்குள் அதன் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க வேண்டியிருந்தது. விளம்பரப் படத் தயாரிப்பாளரான அனம்தாவின் தந்தை, தனது ஒரே மகளுக்கு மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழ வாய்ப்பளித்த மருத்துவக் குழு, நன்கொடையாளரின் குடும்பத்தினர், நன்கொடைக்கு உதவிய தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

