எனது முயற்சி தொடரும்: பிரசாந்த் கிஷோர்

1 mins read
7eaf6c43-6121-4b9b-87f6-eb2d36cd9951
பிரசாந்த் கிஷோர். - படம்: ஊடகம்

பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தாம் எடுத்த முடிவு வாக்காளர்களால் தவறாக நினைக்கப்பட்டிருக்கலாம் என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது கட்சி 4%க்கும் குறைவான வாக்குகளைப் பெறும் என்று தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் வைப்புத்தொகையை இழந்து, வெறும் 3.4% வாக்குகளை மட்டுமே பெற்றது.

இதையடுத்து, அண்மைய பேட்டியில் தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்பதைத் தாம் உணர்ந்திருப்பதாகவும் எதிர்காலத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான தமது முயற்சிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பீகாரில் வெற்றி பெறாமல் நான் பின்வாங்கப் போவதில்லை. ஆனால், அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

“தேர்தலுக்கு சற்று முன்பு, முதல்வர் நிதிஷ் குமாரின் அரசாங்கம் ஒவ்வொரு தொகுதியிலும் 60,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கியது. 25 தொகுதிகளில்கூட வெற்றி பெறாத நிலையில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் மக்கள் பணத்தில் ரூ.40,000 கோடியை மட்டுமே வழங்கி தேர்தலில் வெற்றி பெற்றது.

“எனவே, நான் அரசியலில் இருந்து விலகுவதாக முன்பு கூறியதைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் எழவில்லை,” என்று பிரசாந்த் கிஷோர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
பீகார்சட்டப்பேரவைத்தேர்தல்கட்சி