தேசிய லோக் அதாலத்: 1.03 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு; ரூ.857 கோடி இழப்பீடு

2 mins read
da10da54-55a5-405b-9705-042e393e1cc2
தேசிய லோக் அதாலத்தில் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டது. - படம்: இந்து திசை

சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 1,03,884 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.857 கோடியே 77 லட்சம் இழப்பீடாகக் கிடைத்துள்ளது.

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழுவின் தலைவரும், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியுமான ஆர்.சுரேஷ்குமார் மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் இந்தத் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது.

“சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஆர்.கலைமதி மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 9 அமர்வுகளும் மாவட்டம், தாலுகா அளவில் நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள் தலைமையில் சில அமர்வுகள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 516 அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது,” என்று தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் கூறினார்.

இந்த அமர்வுகளில் காசோலை மோசடி வழக்குகள், சிவில் வழக்குகள், போக்குவரத்து, விபத்து உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் முழு சம்மதத்துடன் வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்த வகையில், மாநிலம் முழுவதும் மொத்தம் 1,03,884 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.857 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரத்து 260 இழப்பீடாகக் கிடைத்துள்ளது.

மேலும், தேசிய லோக் அதாலத்தை மாவட்ட அளவில் சிறப்பாக நடத்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், விருதுநகர் - நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, திண்டுக்கல் - நீதிபதி எம்.தண்டபாணி, புதுக்கோட்டை - நீதிபதி என்.செந்தில்குமார்ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் தேசிய லோக் அதாலத்தைத் தொடங்கி வைத்து, முடிவுக்கு வந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை காசோலையாக வழங்கினர்.

குறிப்புச் சொற்கள்