பெங்களூர்: மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப் பன்முகத்தன்மைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக ‘பெடோம்ஸ் பிரான்ஸ்பேக்’ என்ற புதிய வகை மரப்பாம்பு இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது, நீண்ட காலமாக வேறொரு பாம்பு இனமாக தவறாகக் கருதப்பட்டு வந்த நிலையில் 14 ஆண்டுகாலத் தொடர் ஆய்வுக்குப் பிறகு தனி இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள சுள்ளியா நெடுஞ்சாலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வாகனங்களில் அடிபட்டு இறந்த நிலையில் இரண்டு பாம்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றின் உடல் அமைப்பை பழைய ஆவணங்களுடன் ஆய்வாளர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.
இதன் முடிவில், இது முற்றிலும் புதிய இனம் என்பது உறுதிசெய்யப்பட்டு நவம்பர் 12ஆம் தேதியன்று டாரோபானிகா என்ற அனைத்துலக ஆய்விதழில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஊர்வன, நீர்நில வாழ்வன குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட ராணுவ அதிகாரியும் இயற்கை ஆர்வலருமான கர்னல் ரிச்சர்ட் ஹென்றி பெடோம் அவர்களைக் கௌரவிக்கும் வகையில், இப்பாம்பிற்கு ‘பெடோம்ஸ் பிரான்ஸ்பேக்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதுவரை ‘லார்ஜ்-ஐட் பிரான்ஸ்பேக்’ என்ற பாம்பு இனத்துடன் இது தவறாகக் குறிப்பிடப்பட்டது. ஆனால், சில பண்புகளில் இது தனித்து விளங்குகிறது. அதாவது இப்பாம்பின் நாக்கு அடர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. செதில்களின் எண்ணிக்கை, தலை வடிவம் மற்றும் உடலில் உள்ள கோடுகளின் அமைப்பு ஆகியவை மற்ற மரப்பாம்புகளிலிருந்து மாறுபட்டுள்ளன.
கேரளாவின் அகத்தியமலை (விதுரா) முதல் கர்நாடகாவின் உத்தர கன்னடா வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலையின் தாழ்வான காடுகள், ஆற்றங்கரைகள், பாக்கு, ரப்பர் தோட்டங்களில் இப்பாம்பு வாழ்கிறது. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு இறப்பதே இப்பாம்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
