வெளிநாட்டில் நேர்ந்த சாலை விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உயிரிழப்பு

1 mins read
636dadc6-0469-4fb5-bb4b-1373cfe59787
விபத்தில் காயமடைந்த இந்தியர் ஒருவரைச் சந்தித்த துணைத் தூதரக அதிகாரிகள். - படம்: ஜெட்டா இந்தியத் துணைத் தூதரகம் / எக்ஸ்

ரியாத்: சவூதி அரேபியாவில் புதன்கிழமையன்று (ஜனவரி 29) நேர்ந்த சாலை விபத்து ஒன்றில் இந்தியர்கள் ஒன்பது பேர் மாண்டனர்.

அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து, தேவையான உதவிகளை வழங்கிவருவதாக ஜெட்டாவிலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சவூதியின் மேற்கு நகரமான ஜிஸானில் அவ்விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 26 பேருடன் சென்ற வேன் ஒன்று, எதிர்த்திசையில் வந்த இழுவை வாகனத்துடன் மோதியது.

அதில், இந்தியர்கள் ஒன்பது பேர் உட்பட 15 பேர் நிகழ்விடத்திலேயே இறந்துவிட்டதாகவும் கடுமையாகக் காயமுற்ற 11 பேர் ஜிஸானிலுள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து எக்ஸ் ஊடகப் பக்கம் வழியாகப் பகிர்ந்துகொண்ட இந்தியத் துணைத் தூதரகம், “ஜிஸானில் நேர்ந்த சாலை விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்ததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமுற்றவர்கள் விரைந்து நலம்பெற வாழ்த்துகிறோம். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கி வருகிறோம்,” என்று பதிவிட்டுள்ளது.

சவூதி விபத்தில் இந்தியர்கள் பலர் மாண்டுபோனதை அறிந்து மிகவும் வருத்தமடைந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

“ஜெட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதருடன் பேசினேன். இந்தத் துயரமான சூழலில், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் அவர் வழங்கி வருகிறார்,” என்று எக்ஸ் ஊடகம் வழியாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்