இந்தியாவில் எந்தத் துறைக்கும் ஏகபோக உரிமை இல்லை: மத்திய அமைச்சர்

எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு பதில்

இந்தியாவில் எந்தத் துறைக்கும் ஏகபோக உரிமை இல்லை: மத்திய அமைச்சர்

படம்: எக்னாமிக்ஸ் டைம்ஸ்

10 Oct 2026 - 6:16 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் தனது ‘ஸ்டாா்லிங்க்’ நிறுவன செயற்கைக்கோள் தகவல்தொடர்புச் சேவை தடுக்கப்படுவதாக அமெரிக்கத் தொழிலதிபா் எலான் மஸ்க் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மறுத்துள்ளார்.

இந்தியாவில் எந்தவொரு துறைக்கும் ஏகபோக உரிமை வழங்கப்படுவதில்லை. விதிகளைப் பின்பற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று டெல்லியில் நடைபெறும் இந்திய கைப்பேசி மாநாட்டில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) பேசிய அவர் கூறினார்.

பாதுகாப்புச் சான்றளிப்பு என்ற பெயரில் தமது ‘ஸ்டார்லிங்க்’ சேவையைப் பெரும் தொழிலதிபர்கள் முடக்குவதாகக் குற்றம் சாட்டிய மஸ்க், “இந்தியாவின் தலைவரா அம்பானி?” எனக் கேள்வியெழுப்பினார். இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆளும் அரசு அம்பானி, அதானிக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சாடினார்.

“ஸ்டார்லிங்க், ரிலையன்ஸ் ஜியோ சாட்காம், யூட்டல்சாட் ஒன்வெப் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு ஏற்கெனவே உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசியப் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. பாதுகாப்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகே சேவைகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்படும்,” என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

செயற்கைக்கோள் இணையச் சேவை என்பது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய விஷயம் என்பதால் இதில் மிகுந்த கவனம் தேவை என ராணுவ வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். முன்னதாக, உக்ரேன்-ரஷ்ய போரின் போது கிரீமியா பகுதியில் இணையச் சேவை வழங்க மஸ்க் மறுத்ததை அவர்கள் உதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது கட்டண விகிதங்கள் குறித்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைத்தொடர்புத் துறை ஆகியவை இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. உள்துறை அமைச்சின் பாதுகாப்பு மதிப்பீடு முடிந்த பிறகே அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது..

குறிப்புச் சொற்கள்