இந்தியர்களில் ஏறத்தாழப் பாதிப் பேர் பரிந்துரைக்கப்பட்ட உணவு முறைகளைப் பின்பற்றுவதில்லை என எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு அறக்கட்டளையின் தலைவர் சௌமியா சுவாமிநாதன் சனிக்கிழமை (நவம்பர் 28) தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான வேளாண் விருது வழங்கும் விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
வேளாண்மையில் புத்தாக்கத்தைப் புகுத்தியதுடன், நீடித்து நிலைக்கக்கூடிய விவசாய நடைமுறைகளை ஊக்குவித்து, கிராமப்புறச் சமூகங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கிய விவசாயிகளை அந்நிகழ்ச்சி அங்கீகரித்தது.
அறியாமை, வாங்கும் திறன் இன்மை ஆகியவை சமச்சீர் உணவைத் தவிர்ப்பதற்கான முக்கியக் காரணங்கள் என உலகச் சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை அறிவியலாளரான அவர் குறிப்பிட்டார்.
இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் பரிந்துரைத்துள்ள முறைகளைப் பின்பற்றினால், ஊட்டச்சத்து மாத்திரைகளின் தேவை கணிசமாகக் குறையும் எனவும் ரத்தச் சோகை, வளர்ச்சிக்குறைவு, உடற்பருமன் ஆகியவற்றுக்கு உணவிலேயே தீர்வு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
சத்தான உணவு கிடைப்பதையும் ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வையும் மேம்படுத்த வேண்டும் என்பதைத் திருவாட்டி சௌமியா வலியுறுத்தினார்.
அடுத்த ஆண்டு ‘எல் நினோ’ பருவநிலை மாற்றத்தால் அதிக வெப்பமும் சீரற்ற மழையும் ஏற்பட்டு, சிறு, குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என அவர் எச்சரித்தார்.
மேலும், விவசாயிகளையும் மீனவர்களையும் இணைத்து ஆய்வுகளை மேற்கொள்வதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிராமப்புறப் பெண்களில் 80 விழுக்காட்டினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளபோதும், 20 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே தங்கள் பெயரில் நிலம் வைத்துள்ளனர்.
“மகாராஷ்டிராவின் பெண் விவசாயிகள் அதிகாரமளிப்புச் சட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். பள்ளி உணவுத் திட்டம், பொது விநியோக முறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.
விழாவில் சௌமியா சுவாமிநாதனுக்குப் ‘பசுமைப் புரட்சி மரபுடைமை விருது’ வழங்கப்பட்டது.
சுரிந்தர் குமார் வாசலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பீகாரின் ராஜ்குமாரி தேவிக்கு ஆண்டின் சிறந்த பெண் விவசாயி விருதும் வழங்கப்பட்டன.
மேலும் ஏழு விவசாயிகளும் இரண்டு இளம் சாதனையாளர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.
