இந்தியக் குடியுரிமை பெறுவோருக்கு மின்னிலக்கப் பதிவுச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்

இந்தியக் குடியுரிமை பெறுவோருக்கு மின்னிலக்கப் பதிவுச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்

படம்: ஏஎஃப்பி

28 Nov 2026 - 5:43 pm

1 mins read

புதுடெல்லி: பதிவு அல்லது இயல்புரிமை மூலம் இந்தியக் குடியுரிமை பெறுவோருக்கு இனி மின்னிலக்கப் பதிவுச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.

சான்றிதழின் அச்சுப் பிரதி வேண்டுமென விண்ணப்பதாரர் கோரிக்கை விடுத்தால் மட்டுமே அது வழங்கப்படும்.

2009ஆம் ஆண்டின் குடியுரிமை விதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள திருத்தங்களின்படி இந்தப் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 5(1)ன் கீழ் உள்ள ஏ, சி, டி, இ, எஃப் ஆகிய உட்பிரிவுகளின்கீழ் இந்தியக் குடிமகனாகப் பதிவுசெய்யப்படும் ஒவ்வொருவருக்கும் மின்னிலக்கப் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தியக் குடிமகனைத் திருமணம் செய்ததன் மூலம், இந்தியப் பெற்றோருக்குப் பிறந்ததன் மூலம் அல்லது இந்திய வம்சாவளியினர் என்ற அடிப்படையில் குடியுரிமை பெறுவோர் உள்ளிட்டோர் அந்தப் பிரிவுகளின்கீழ் வருவர்.

அவர்களுக்குப் படிவம் எக்சில் (X) மின்னிலக்கப் பதிவுச் சான்றிதழ் அளிக்கப்படும்.

இந்திய அரசின் சார்புச் செயலாளர் பதவிக்குக் குறையாத அதிகாரி அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அதில் மின்னிலக்கக் கையொப்பம் அல்லது நேரடிக் கையொப்பம் இடுவார்.

அதேபோல, குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6(1)ன் கீழ் இயல்புரிமை மூலம் இந்தியக் குடியுரிமை பெறுவோருக்கும் படிவம் XIIஇல் மின்னிலக்க இயல்புரிமைச் சான்றிதழ் வழங்கப்படும்.

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி இதில் கையொப்பமிடுவார். அவர்களுக்கும் சான்றிதழின் அச்சுப் பிரதி தேவைப்பட்டால், அதற்காகத் தனியாகக் கோரிக்கை விடுக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்