புதுடெல்லி: ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையைத் தொடங்கியது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்துநதி தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், அனைத்துலக அரங்கில் பாகிஸ்தானுக்கு பல்வேறு வகையிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்தது.
பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியாவின் தரைப்படை, ஆகாயப்படையினர் துல்லியமாகத் தாக்கி அழித்தனர்.
இந்நிலையில், இருதரப்பும் ஒப்புக்கொண்டதால் சனிக்கிழமை மாலை 5 மணியுடன் சண்டை நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
எனினும், அடுத்த மூன்று மணிநேரத்துக்கு பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை மீறி, எல்லையோரப் பகுதிகளில் ஆங்காங்கே துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு எல்லையோரப் பகுதிகளில் இயல்புநிலை திரும்பியுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்தது.
இதற்கேற்ப, காஷ்மீரில் பொதுமக்கள் வழக்கம்போல் பணிகளைக் கவனிப்பதாகவும் அங்கு இயல்புநிலை திரும்பியிருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்திருப்பதாகவும் ஊடகத் தகவல் தெரிவித்தன. இது தொடர்பாக பல புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இந்திய விமானப்படை வெளியிட்ட திடீர் அறிவிப்பு மீண்டும் பேசுபொருள் ஆகியுள்ளது.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்கிறது என்பதே அந்த அறிவிப்பாகும்.
“ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாக வெற்றிகரமாக செய்துள்ளோம். விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
“ஆப்பரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை. சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிப்பதையும் பரப்புவதையும் தவிர்க்க வேண்டும்,” என இந்திய விமானப் படை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டெல்லியில் உள்ள தமது இல்லத்தில் இந்திய முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை காலை (மே 11) ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும் முப்படைத் தளபதிகளுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக ஏஎன்ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

