மும்பை: மகாராஷ்டிராவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடிய பாரதிய ஜனதா, சிவ சேனைக் கட்சி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணியின் பதவியேற்பு நிகழ்ச்சியை, சனிக்கிழமை (டிசம்பர் 7) புறக்கணித்து எதிர்த்தரப்பு மகாவிகாஸ் அகாதி கூட்டணி வெளிநடப்பு செய்தது.
மகாயுதி கூட்டணி மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளதாக மகாவிகாஸ் அகாதி கூட்டணி புகார் கூறி அவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளது.
ஆனால், எதிர்த்தரப்பு கூட்டணியின் அறைகூவலுக்குச் செவிசாய்க்க மறுத்து சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவரான அபு அசிம் அஸ்மியும் கட்சித் தலைவர்களில் ஒருவரான ரையஸ் ஷேக் என்பவரும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர் என்று என்டிடிவி ஊடகம் கூறியது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றம் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக மூன்று நாள் அமர்வாக சனிக்கிழமையன்று கூடியது. இதில் பதவியேற்புக்காக இடைக்கால அவைத் தலைவராக காளிதாஸ் கொலமப்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பதவியேற்பு நிகழ்வு, புதிய உறுப்பினர்களின் உறுதிமொழி ஏற்பு, புதிய சட்டமன்ற நாயகர் தேர்வு, ஆளுநர் உரை ஆகியவற்றை வழிநடத்தினார்.
இதற்கிடையே, எதிர்த்தரப்பு மகாவிகாஸ் அகாதி கூட்டணித் தலைவர்கள் தாங்கள் எடுத்த முடிவு குறித்து விளக்கமளிக்க சட்டமன்றத்தில் உள்ள சத்திரபதி சிவாஜி சிலை அருகே கூடினர்.
அப்பொழுது உரையாற்றிய எதிர்த்தரப்பு கூட்டணித் தலைவர்களில் ஒருவரான திரு தாக்கரே, “வாக்குப் பதிவு இயந்திரங்களால் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதால் நாங்கள் பதவியேற்பு நிகழ்வை புறக்கணித்தோம். இந்தத் தேர்தல் முடிவுகள் மக்கள் அளித்த முடிவல்ல,” என்று கூறினார்.
மற்ற எதிர்த்தரப்புக் கூட்டணித் தலைவர்களான காங்கிரசின் நானா பட்டேல், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜிதேந்திர அவ்காத் ஆகியோர் ஆளும் கூட்டணியின் ஜனநாயக விரோதப் போக்கை சாடினர். அத்துடன், மீண்டும் வாக்குச் சீட்டு தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.