பங்ளாதேஷைப் போன்ற ஆட்சி மாற்றத்திற்கு முயலும் எதிர்க்கட்சிகள்: ராஜ்நாத் சிங்

பங்ளாதேஷைப் போன்ற ஆட்சி மாற்றத்திற்கு முயலும் எதிர்க்கட்சிகள்: ராஜ்நாத் சிங்

கோப்புப் படம்: ஏஎன்ஐ

16 Oct 2026 - 7:46 pm

2 mins read

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பங்ளாதேஷில் நடத்தப்பட்டதைப் போன்ற ஆட்சி மாற்றத்துக்கு ஆசைப்படுவதாக இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அந்தக் கட்சிகளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) கடுமையாகச் சாடிய அவர், அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட இளையர்களை அந்தக் கட்சிகள் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய திரு ராஜ்நாத் சிங், குழப்பத்தை உருவாக்கவோ அல்லது அரசியலமைப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் குறைக்கவோ ஜனநாயகம் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்றார்.

“காங்கிரசும் அதன் அரசியல் கூட்டணிக் கட்சிகளும் நேரடியாகவும் தங்கள் ஆதரவு அமைப்புகள் மூலமாகவும் இளையர்களின் ஆற்றலை ஆக்ககரமான பணிகளுக்கும் நாட்டு நிர்மாணத்திற்கும் பயன்படுத்துவதற்குப் பதிலாக அரசியல் மோதலுக்குப் பயன்படுத்த முயல்கின்றன.

“நாட்டின் இளையர்கள் அராஜக அரசியலில் பகடைக்காய்களாக உருட்டப்படுகிறார்கள்.

“இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பங்ளாதேஷிடமிருந்து ஊக்கம் பெற்றதாக அவர்கள் பகிரங்கமாகச் சொல்கிறார்கள். அதே வேளை, அரசாங்கத்தை வீழ்த்துவது பற்றி மற்றொருவர் வெளிப்படையாகப் பேசுகிறார்.

“ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைப்பதும் நாட்டைக் கொந்தளிக்கச் செய்வதுமே அவர்களின் நோக்கம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது,” என்று தெரிவித்தார் திரு ராஜ்நாத் சிங்.

2024ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தைக் கவிழ்த்த பங்ளாதேஷ் புரட்சியைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு கூறினார்.

“வாக்காளர் பட்டியல் சிற்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் எதிர்க்கட்சிகள் ‘ஆட்சி மாற்றம்’ போன்ற வார்த்தைகளை பிரசாரம் செய்கிறார்கள். இதிலிருந்து அவர்களின் போராட்டம் எதற்காக என்பது புரிகிறது,” என்றார் ராஜ்நாத்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடைமுறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகுமாறு டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் திரு ராஜ்நாத் சிங்கின் கருத்து வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்