புதுடெல்லி: பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் 6வது நாளாக திங்கட்கிழமையன்றும் (ஜூலை 28) நீடித்தது.
குறிப்பாக, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் அன்றே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன.
இதையடுத்து, நாள்தோறும் அமளியும் போராட்டமும் நீடித்து வருகின்றன. இதனால், அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிய நிலையில், அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கத் தயார் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
கடந்த சனிக்கிழமையன்று, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு நேர்மாறாக திங்கட்கிழமையன்றும் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும், கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

