பாகிஸ்தானின் சிந்து நிலப்பகுதி இந்தியாவில் இணையக்கூடும்: ராஜ்நாத் சிங்

1 mins read
aa11de11-ca01-43ea-b2fc-f3dff70383d2
இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். - படம்: ஊடகம்

புதுடெல்லி: பாகிஸ்தான் வசமுள்ள சிந்து மாகாணம் இந்தியாவுடன் மீண்டும் இணையக்கூடும் என்று தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு சிக்கலாகி இருந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படைகள் நடத்திய ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் அந்தச் சிக்கல் அதிகரித்தது.

இப்படிப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லியில் சிந்து சமாஜ் மாநாட்டில் கலந்துகொண்ட திரு ராஜ்நாத் சிங், எல்லைகள் நிரந்தரமானது அல்ல கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “இன்று, சிந்து நிலப் பகுதி இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், நாகரிக ரீதியாக, சிந்து எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்.

“எல்லைகள் மாறக்கூடியவை. எந்த ஓர் எல்லையும் யாருக்கும் நிரந்தரமானது கிடையாது. யாருக்குத் தெரியும், நாளை சிந்து நிலப் பகுதி மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பக் கூடும்,” என்றார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் ‘சிந்து இந்துக்கள்’ என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டிய ராஜ்நாத் சிங், “இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, சிந்து வட்டார மக்களில் பல இந்துக்கள் இந்தியாவில் இருந்து சிந்துவைப் பிரிப்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை,” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வசமுள்ள சிந்து மாகாணம், இந்திய மக்களின் பெரும் பகுதியினரைக் கொண்ட சிந்து சமூகத்தின் பூர்வீக இடமாகும். சிந்து நாகரிகத்தின் பிறப்பிடமாக சிந்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்