புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தின் அலுவல்மொழியாக இந்தியைப் பரிந்துரைப்பது தொடர்பில் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை அந்நீதிமன்றமே தள்ளுபடி செய்தது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) அம்மனுவை விசாரித்தது.
மொழி தொடர்பான சீர்திருத்தங்கள் ஏற்கெனவே நிர்வாக அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றும் நீதிமன்ற உத்தரவுகள்மூலம் அவற்றைக் கொண்டுவர முடியாது என்றும் அமர்வு தெளிவுபடுத்தியது.
பிரமேஷ்வர் நாத் மிஸ்ரா என்பவர் தாக்கல் செய்த அந்தப் பொதுநல மனுவில், உச்ச நீதிமன்றத்தில் இந்தியைப் பயன்படுத்துவது குறித்துப் பரிந்துரைக்க ஆணையம் அமைக்க வலியுறுத்தப்பட்டது. மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், பல்வேறு அரசமைப்புச் சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.
அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே படிப்படியாக மொழிச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். அனைத்து தீர்ப்புச் சுருக்கங்களும் இப்போது இந்தியில் வழங்கப்படுகின்றன என்றும் விரைவில் மற்ற வட்டார மொழிகளிலும் அச்சேவை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். நாட்டின் பன்மொழிப் பண்பாட்டையும் வட்டார மொழிகளையும் நீதிமன்றம் மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நீதிமன்ற உத்தரவுகள் மூலமாக இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர இயலாது என்றும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டி, நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
