தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தேசிய புலனாய்வு முகமையால் (NIA) தேடப்பட்டு வந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதமாற்றம் குறித்துப் பிரசங்கம் செய்தவர்களை ராமலிங்கம் தட்டிக் கேட்டதாலேயே இந்தக் கொலை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏற்கெனவே 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐவர் தலைமறைவாக இருந்தனர்.
தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த முகமது நபீல் ஹாசன் (35), புர்ஹானுதீன் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தபோது, இரகசிய தகவலின் பேரில் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் என்ஐஏ, காவல்துறை உதவியுடன் வாகனச் சோதனை நடத்தியது.
நபீல் ஹாசன், புர்ஹானுதீனை ரகசியமாக அழைத்து வந்ததாகக் கூறப்படும் முகமது இம்ரான் (33), அப்பாஸ் (30) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
நான்கு பேரும் பள்ளிகொண்டா காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, என்ஐஏ, உளவுத் துறை அதிகாரிகளால் 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணைக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் அவர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

