திருநெல்வேலி: தமிழர்களின் தொன்மையான வரலாற்றையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் 13.2 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை அருங்காட்சியகத்தை’, சனிக்கிழமை (டிசம்பர் 20) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை மற்றும் துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், பானைகள், நாணயங்கள், இரும்புப் பொருள்கள் உள்ளிட்ட 2,000க்கும் மேற்பட்ட பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.
சிவகளையில் 5,345 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு இருந்ததற்கான சான்றுகள் மூலம், இந்திய வரலாறு தெற்கிலிருந்து தொடங்குகிறது என்பதை இந்த அருங்காட்சியகம் உறுதிப்படுத்துகிறது.
முன்னோர்களின் வணிகம், விவசாயம் மற்றும் வாழ்வியல் முறைகளைத் தற்காலத் தலைமுறையினர் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் 3D மற்றும் 5D திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் பாரம்பரியக் கட்டடக்கலையுடன் நவீன தொழில்நுட்பத்தின் கலவையாக, பார்ப்பதற்கு ஓர் அரண்மனையைப்போல இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மாணவர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்களுக்குத் தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை அறிந்துகொள்ளும் ஒரு சிறந்த அறிவுக்களஞ்சியமாகத் திகழும்.

