அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க முயற்சி; இந்திய ஆடவர் கைது

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க முயற்சி; இந்திய ஆடவர் கைது

படம்: அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை

17 Oct 2026 - 2:25 pm

1 mins read

வாஷிங்டன்: கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காகத் தவறான தகவல்களை அளித்த சந்தேகத்தின்பேரில் இந்திய ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முகேஷ்குமார் சோமபாய் சௌதரி என அடையாளம் காணப்பட்ட அந்த ஆடவர், தெரிந்தே தவறான தகவல்களை வழங்கியது, தேர்தலில் வாக்களிக்க அல்லது பதிவுசெய்ய அமெரிக்கக் குடியுரிமை இருப்பதாகப் பொய்யாக உரிமை கோரியது என்ற இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

கடந்த 2024 நவம்பர் 5ஆம் தேதி மின்னசோட்டா தேர்தல் சட்டத்தின்படி தேவைப்படும் வாக்காளர் கையொப்பச் சான்றிதழில் சௌதரி கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டதன்மூலம் தான் ஓர் அமெரிக்கக் குடிமகன் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

ஆனால், அக்காலகட்டத்தில் சௌதரி அமெரிக்கக் குடிமகன் அல்லர் என்றும் வாக்களிப்பதற்காகத் தெரிந்தே பொய்யான உறுதிமொழியை அவர் சமர்ப்பித்தார் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சௌதரி தவறிழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால், ஒவ்வொரு குற்றத்திற்கும் ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

கூட்டரசுத் தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்கள் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக் குழுவின் சிறப்பு அதிகாரி டிராவிஸ் பிக்கார்ட் கூறினார்.

இதனிடையே, அமெரிக்கத் தேர்தல்களில் சட்டவிரோதமாகப் பங்கேற்கும் வெளிநாட்டினர் கைதுசெய்யப்பட்டு, நாடுகடத்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் மார்க்வெய்ன் மலின் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்