சென்னை: காலஞ்சென்ற நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டைக் கையகப்படுத்துவதற்கான உத்தரவை ரத்துசெய்யும்படி அவருடைய மகனும் நடிகருமான பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
சிவாஜியின் பேரன் துஷின் பங்குதாரராக உள்ள தயாரிப்பு நிறுவனம் வாங்கிய கடனுக்காக ‘அன்னை இல்லம்’ என்ற வீட்டைக் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் மார்ச் மாதத் தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது. சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ளது அமரர் சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’.
உத்தரவை நீக்க கோரி பிரபு தாக்கல் செய்துள்ள மனுவில், தம் தந்தை உயிருடன் இருந்தபோதே அன்னை இல்லத்தை தமக்கு உயில் எழுதி வைத்து பத்திரம் பதிவுசெய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தம்முடைய மூத்த சகோதரர் ராம் குமார் தொடர்புடைய நிதிப் பிரச்சினையில் இந்த வீட்டைக் கையகப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக பிரபு கூறியுள்ளார்.
வீட்டில் ராம் குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால் கையகப்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை என்ற வாதத்தைப் பிரபு தரப்பு முன்வைத்துள்ளது.

