புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் கனடாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அந்தத் தகவலை ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதரகம் ’எக்ஸ்’ சமூக ஊடகத் தளம் வழியாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அண்மையில் கனடியப் பிரதமர் மார்க் கார்னியுடன் திரு மோடி தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மக்கள் தொடர்பு ஆகிய பல்வேறு துறைகளில் இந்தியா-கனடா இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
பிரதமர் மோடியின் பயணம் பெரும்பாலும் டொரான்டோ நகரை மையமாகக் கொண்டிருக்கும் என்று மார்க் கார்னி தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டைப் போலவே இம்முறையும் டொரான்டோவில் நடைபெறும் இந்திய வம்சாவளியினருக்கான பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
கனடா பயணத்தை முடித்துக்கொண்டு, டிசம்பர் 13 முதல் 15 வரை அமெரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சநிலை மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார்.
அதைத்தொடர்ந்து, டிசம்பர் 16 ,17 ஆகிய தேதிகளில் பிரசல்ஸ் நகருக்குச் செல்லும் திரு மோடி, ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். அங்கு இருதரப்புப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறும்.
இதற்கிடையே, இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்டச் சட்ட வரைவுப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா-கனடா வர்த்தக ஒப்பந்தமும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாராகிவிடும் என்று இந்தியாவுக்கான கனடியத் தூதர் கிறிஸ்டஃபர் கூட்டர் கடந்த செப்டம்பர் மாதமே குறிப்பிட்டிருந்தார்.
