புதுடெல்லி: காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார்.
போராட்டங்களால் எந்தப் பயனும் இல்லை, பஞ்சாபில் அடுத்த அரசாங்கத்தை என்டிஏ கூட்டணி அமைக்கும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
டெல்லியில் யமுனை நதியைச் சுத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு ரூ.8,941 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தபோது அமித்ஷா அவ்வாறு கூறினார்.
டெல்லியில் முந்தைய காங்கிரஸ், ஆம் ஆத்மி அரசுகள் கழிவுநீர் ஆற்றில் கலக்க அனுமதித்ததாகவும், தற்போது பாஜக அரசு அந்தக் கழிவு நீரைசுத்தம் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தாக்கிப் பேசிய அமித்ஷா, வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் சாக்குப்போக்கு அரசியல் ஆம் ஆத்மியைக் காப்பாற்றாது என்றார்.
“பஞ்சாப் மக்கள் ஒரு என்டிஏ கூட்டணி அரசை விரும்புகிறார்கள், தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வி அடையும். யமுனையைச் சீரமைத்த பிறகு 2029ல் மக்கள் ஆதரவைப் பாஜக கோரும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பஞ்சாபில் என்டிஏ அரசு அமைந்த பிறகு, தற்போது நிலவும் போதைப்பொருள் கடத்தல் அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அமித்ஷா கூறினார்.
