ராய்பூர்: இந்தியாவின் ‘விக்சித் பாரத்’ எனப்படும் ‘வளர்ந்த இந்தியா’ என்ற தேசிய இலக்குக்கு ஏற்றவாறு தங்கள் நடைமுறைகளை மாற்றிக்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி, கட்டமைப்புகள் நவீனப்படுத்தப்படவேண்டும் என்றும் மக்களிடையே காவல்துறை மீதான கண்ணோட்டத்தை மாற்றவேண்டும் என்றும் இளையர்களுடனான தொடர்புகளை மேலும் அதிகரிக்கவேண்டும் என்றும் திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் நடைபெற்ற 60வது அகில இந்தியக் காவல்துறை ஐஜிக்கள், தலைமை இயக்குநர்கள் மாநாட்டில் அவர் பேசினார்.
குடிமக்களை மையமாகக் கொண்டு சேவை வழங்குவதை உறுதிசெய்தபடி நிபுணத்துவம், உகந்த நேரத்தில் நடவடிக்கை எடுப்பது போன்ற தன்மைகளையும் காவல்துறை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்று திரு மோடி எடுத்துச் சொன்னார்.
“நிபுணத்துவம், சுற்றி நடப்பதில் ஈடுபாடு காட்டுவது (sensitivity), உகந்த நேரத்தில் நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றில் தங்களை மேம்படுத்திக்கொண்டு பொதுமக்கள் அதிலும் குறிப்பாக இளையர்களிடையே இருக்கக்கூடிய காவல்துறை பற்றிய கண்ணோட்டத்தை உடனடியாக மாற்றவேண்டிய அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்,” என்று மூன்று நாள்கள் நீடித்த மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது. இந்த மாநாடு, ‘வளர்ந்த இந்தியா: பாதுகாப்பு அம்சங்கள்’ (விக்சித் பாரத்: செக்கியூரிட்டி டைமென்ஷன்ஸ்) என்ற கருப்பொருளைக் கொண்டிருந்தது.
நகர்ப்புறங்களுக்கான காவல் முறைகளை மேம்படுத்துவது, சுற்றுப்பயணிகளுக்கான காவல்துறை அணுகுமுறைகள் ஆகியவற்றை வலுப்படுத்தவேண்டிய அவசியத்தை திரு மோடி வலியுறுத்தினார். அதிவேகமாக வளர்ந்துவரும் நகரங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் சட்ட ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும் குறிப்பிட்ட அணுகுமுறைகள் தேவை என்றும் அவர் எடுத்துரைத்தார்.
தொழில்நுட்பத்தை மேலும் நன்கு பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, இந்தியாவின் ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புத் தகவல் தளமான நேட்கிரிட்டில் (NATGRID) சேர்க்கப்பட்டுள்ள தகவல் தரவுகளை செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் இணைக்குமாறு மாநில, யூனியன் பிரதேசக் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டார். உதவியாக இருக்கக்கூடிய ஆக்ககரமான உளவுத் தகவல்களைப் பெற அவ்வாறு செய்யுமாறு திரு மோடி கேட்டுக்கொண்டார்.

