சண்டிகர்: மது, சுரங்க மாஃபியாக்களுக்கு பஞ்சாப் அரசு துணைபோவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கோர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பஞ்சாப் அரசு தமக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
அண்மைக் காலமாக பஞ்சாப் அரசு குறித்து நவ்ஜோத் கவுர் கடுமையாக விமர்சித்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு பஞ்சாப்பில் ரூ.500 கோடி கொடுப்பவருக்கே முதல்வர் பதவி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் நவ்ஜோத் கவுர். இது தொடர்பாக அவர் அம்மாநில முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
“எனக்கு இப்போது பாதுகாப்பு தேவை எனக் கருதுகிறேன். ஏதேனும் நேர்மாறாக நடந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள்,” என்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நவ்ஜோத் கோர்.
மேலும், அண்மையில் தாம் சில பிரச்சினைகள் குறித்து தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, பஞ்சாப் ஆளுநர் ஏன் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் மது, சுரங்க மாஃபியாக்களுக்கு துணை போகிறீர்கள் என்றும் அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆளுநரை தாம் அண்மையில் சந்தித்தபோது, சில முக்கியமான விவகாரங்கள் குறித்து மனு அளித்ததாகக் கூறியுள்ள நவ்ஜோத் கோர், அந்த மனுவின் நகலையும் வெளியிட்டுள்ளார்.
அவரது சமூக ஊடகப் பதிவு பரவலாக பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக, தமது கணவருக்கு எந்த கட்சியாவது முதல்வர் பதவி அளித்தால் அதன் மூலம் பஞ்சாப்பை மேம்படுத்த அவர் உழைப்பார் என்றும் நவ்ஜோத் கோர் கூறியிருந்தார்.

