பத்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் பேருக்கு ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு: அஸ்வினி வைஷ்ணவ்

1 mins read
f53ffcc5-2e41-441f-a011-57b6d06cdcb3
அஸ்வினி வைஷ்ணவ். - படம்: ஊடகம்

புதுடெல்லி: கடந்த பத்து ஆண்டுகளில் ஏறக்குறைய ஐந்து லட்சம் பேருக்கு இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

கடந்த 2014 முதல் 2025 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் வேலைக்குப் பணியமர்த்தப்பட்டோரின் விகிதம் பெரும் மாற்றம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ரயில்வே துறை 5.08 லட்சம் பேரை பணியமர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் 4.11 லட்சம் பேருக்கு மட்டுமே ரயில்வேயில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார். இது எண்ணிக்கை அளவில் 23.6 விழுக்காடு அதிகம் என்றார் அவர்.

உதவி லோகோ ஓட்டுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ரயில்வே பாதுகாப்புப் பிரிவில் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, பல்வேறு சவால்களைச் சமாளித்து ஆட்சேர்ப்பு நடந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், ரயில்வேக்கான பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்