தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்வுத்தாள்களை ஆசிரியர் தொலைத்துவிட்டதால் மாணவர்களுக்கு மறுதேர்வு

1 mins read
3c8c266f-8dca-4223-bf3b-372a09b88d3d
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரளப் பல்கலைக்கழகம். - படம்: இணையம்

திருவனந்தபுரம்: ஆசிரியர் ஒருவரின் கவனக்குறைவால் முதுநிலைப் பட்டம் பயின்ற 71 மாணவர்கள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவின் கேரளப் பல்கலைக்கழகத்தில் 2022-2024 வரை எம்பிஏ பயின்ற மாணவர்கள், தங்களது இரண்டாம் ஆண்டின் முற்பாதியில் ‘புரோஜெக்ட் ஃபைனான்ஸ்’ என்றொரு பாடத்தைப் பயின்றனர். அதற்கான தேர்வைச் சென்ற ஆண்டு மே மாதம் அவர்கள் எழுதினர்.

ஆயினும், அத்தேர்வுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதனால், வேலைக்கும் மேற்படிப்பிற்கும் விண்ணப்பம் செய்ய முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

அதனையடுத்து, தேர்வு முடிவுகள் வெளியாகாததற்கான விளக்கம் கேட்டு அவர்கள் பல்கலைக்கழகத்தை அணுகினர்.

அதனைத் தொடர்ந்து, உள்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில், அம்மாணவர்களின் தேர்வுத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டிய ஆசிரியர், அவற்றைப் பயணத்தின்போது தவறவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுகுறித்து அந்த ஆசிரியர் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் தெரிவித்துவிட்டதாகவும் கேரள ஊடகச் செய்தி தெரிவிக்கிறது்

இதனையடுத்து, 2025 ஏப்ரல் 7ஆம் தேதி நடத்தப்படவிருக்கும் மறுதேர்வை எழுத வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட 71 மாணவர்களுக்கும் மின்னஞ்சல்வழி தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளின்படி, மாணவர்களின் விடைத்தாள்கள் கட்டப்பட்டு, மதிப்பீட்டிற்காக உரிய ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மதிப்பீடு செய்வதற்காக ஆசிரியர்கள் அவற்றைத் தங்கள் வீட்டிற்கு எடுத்துச்செல்லலாம்.

அப்படி வீட்டிற்கு எடுத்துச்செல்லும் வழியில் அவற்றைத் தவறவிட்டுவிட்டதாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்