முக்கியமான மைல்கல்லை எட்டிய ரிஷிகேஷ்-கர்ணபிரயாகை ரயில் பாதை

முக்கியமான மைல்கல்லை எட்டிய ரிஷிகேஷ்-கர்ணபிரயாகை ரயில் பாதை

படம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

29 Nov 2026 - 4:30 pm

2 mins read

டேராடூன்: ரிஷிகேஷ்-கர்ணபிரயாகை ரயில் திட்டத்தின் முக்கியப் பகுதியான 6.59 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரதான சுரங்கப்பாதையின் இரு முனைகளும் ருத்ரபிரயாகை மாவட்டத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) மாலை நிகழ்ந்த இந்தத் துளையிடும் நிறைவுப்பணி, மலைப்பகுதி ரயில் திட்டத்தில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

சுமேர்பூர், மரோரா ஆகிய இரு பகுதிகளில் இருந்தும் இந்தச் சுரங்கம் தோண்டப்பட்டது. சுமேர்பூர் முனையிலிருந்து 4.7 கிலோ மீட்டர் தொலைவும் மரோரா முனையிலிருந்து 1.79 கிலோ மீட்டர் தொலைவும் பணிகள் நிறைவடைந்து தற்போது இணைக்கப்பட்டுள்ளன.

குடியிருப்புப் பகுதிகளுக்கு அடியில் பலவீனமான மண், மெல்லிய பாறை, மண் அடுக்கு, தொடர்ச்சியான நீர்க்கசிவு போன்ற சவாலான புவியியல் சூழல்களுக்கு இடையே இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

திட்டத்தின் பேக்கேஜ் 8 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தச் சுரங்கப்பாதை, ‘நியூ ஆஸ்ட்ரியன் சுரங்க தொழில்நுட்பம், கட்டுப்படுத்தப்பட்ட வெடிவைப்பு மூலம் கட்டமைக்கப்பட்டது.

சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் தாக்கங்களைக் கண்காணித்தபடி, படிப்படியாகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஏறக்குறைய ரூ.37,119 கோடி மதிப்பீட்டிலான 125 கிலோ மீட்டர் நீள ரிஷிகேஷ்-கர்ணபிரயாகை ரயில் திட்டத்தில், கிட்டத்தட்ட 104 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப் பாதைகள் வழியாகச் செல்லும்.

இதில் 12 ரயில் நிலையங்களும் 19 பாலங்களும் அமைய உள்ளன. முக்கியமான, தப்பிக்க உதவும் சுரங்கங்களின் மொத்த நீளம் ஏறக்குறைய 213 கிலோ மீட்டர் ஆகும்.

இத்திட்டம் டேராடூன், தெஹ்ரி, பௌரி, ருத்ரபிரயாகை, சமோலி மாவட்டங்களுக்குப் பயனளிக்கும் எனச் சுற்றுலா அமைச்சர் சத்பால் மகராஜ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ‘சார் தாம்’ யாத்திரைக் காலங்களில் சுற்றுலா, உள்ளூர் வர்த்தகம், மலைப்பகுதிப் பொருளியலுக்கு இது பெரும் ஊக்கம் அளிக்கும். பயணிகள் ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும் சரக்கு ரயில்களை 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்