புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ரூ.750 பணம் மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளும் வேகம் எடுக்கத் தொடங்கி இருக்கின்றன.
குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (டிசம்பர் 10) முதல் டோக்கனும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த டோக்கனில் எந்த தேதியில் சென்று பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றிய விவரம் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தை போன்று அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், பொங்கல் தொகுப்புக்கு மாறாக ரேஷன் அட்டை உரிமைதாரர்களுக்கு ரொக்கப்பணம் வழங்க அரசு முடிவு செய்தது. இதற்கான அனுமதியை ஆளுநர் அளித்தார்.
அதனையடுத்து பொங்கல் தொகுப்பிற்கு பதில், இந்தாண்டு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.750 வரவு வைக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்து உள்ளார்.

