புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் இந்தியா, ரஷ்யா இடையேயான 23வது வருடாந்திர உச்ச நிலை மாநாட்டில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா வருமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை புட்டின் ஏற்றுக்கொண்டார் என்றும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக புட்டின் இந்தியாவிற்கு வருகை தருவார் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
தனது பயணத்தின்போது பிரதமர் மோடியுடன் அதிபர் புட்டின் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று இருதரப்பிலும் உறுதி செய்யப்பட்டது. மேலும் ரஷ்ய அதிபரின் இந்திய வருகையைக் கௌரவப்படுத்தும் வகையில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு விருந்து அளிப்பார் என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“அதிபர் புட்டின் மேற்கொள்ளும் அரசுமுறைப் பயணம், இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை இருநாடுகளின் தலைமைக்கு வழங்கும்.
“இது சிறப்பு உத்திசார் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையை அளிக்கும். மேலும் பரஸ்பர ஆர்வமுள்ள வட்டார மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள உதவும்,” என அனைத்துலகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

