சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் சொத்துகள் வங்கிகளிடம் ஒப்படைப்பு

2 mins read
96d1708a-d7d6-4160-9c2f-757e8c5ed724
சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஐஇ தமிழ்

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனத்தின் 107 கோடி ரூபாய் சொத்துகளை மீட்டுள்ள அமலாக்கத் துறை, அவற்றை வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளது.

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம், 2017ல் இந்தியன் வங்கியில் தவறான நிதிநிலை ஆவணங்களை தாக்கல் செய்து இரண்டு கட்டங்களாக 240 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

ஆனால் எதற்காக கடன் பெறப்பட்டதோ, அதற்காக அப்பணத்தைப் பயன்படுத்தாமல், வேறு காரணங்களுக்காக முறைகேடாகப் பயன்படுத்தி மோசடி செய்தது கண்டறியப்பட்டது.

இதனால், இந்தியன் வங்கிக்கு 312.13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக முதலில் சிபிசிஐடி காவல்துறையில் புகார் அளித்ததாக தினமலர் செய்தி குறிப்பிட்டது.

பின்னர் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது .

அந்த வழக்கில் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தியன் வங்கி புகாரில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 235 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி பிப்ரவரி 17ஆம் தேதி இந்தியன் வங்கியிடம் அமலாக்கத் துறை ஒப்படைத்தது.

எஞ்சிய 40 கோடி ரூபாய் சொத்துகளை வங்கியிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவையும் கைப்பற்றப்பட்டு சனிக்கிழமை (டிசம்பர் 13) ஒப்படைக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை, 275 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், இந்தியன் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தவறான நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தும் சரக்கு இருப்புகளை உயர்த்திக் காட்டியும் ஆக்சிஸ் வங்கியிடம், 118.88 கோடி ரூபாயை சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனம் கடன் பெற்றது. இதனால், 81.90 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய குற்றப்பிரிவில் அந்த வங்கி புகார் அளித்தது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனத்தின் 74.06 கோடி ரூபாய் சொத்துகள் 2023ல் முடக்கப்பட்டன.

தற்போது, 66.93 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு சொத்துகளை முடக்கி ஆக்சிஸ் வங்கியிடம் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒப்படைத்தது.

கடந்த இரண்டு நாள்களாக சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனத்திடம் இருந்து, 107 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் கைப்பற்றி, வங்கிகளிடம் ஒப்படைத்து இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்