புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தையொட்டிய இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சனிக்கிழமை (டிசம்பர் 7) இந்திய ராணுவம் சிறிய ரக வானூர்திகளை சுட்டு வீழ்த்தியது.
இந்த அதிரடி நடவடிக்கையின்போது 1.17 கிலோ எடையுள்ள இரண்டு ஹெராயின் உறைகள் கண்டெடுக்கப்பட்டன.
முன்னதாக, எல்லை வழியாக இந்தியாவுக்குள் பேரளவில் போதைப்பொருள்கள் கடத்தி கொண்டுவரப்படலாம் என உளவுத்துறை தெரிவித்து இருந்தது.
இதனால் எல்லையில் சுற்றுக்காவல் பணி தீவிரமடைந்தது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பெரஸ்பூரில் உள்ள சங்கத்ரா கிராமத்திற்கு அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையின்போது விவசாய நிலம் ஒன்றில் பெரிய உறை ஒன்று சிக்கியது.
அந்த இடத்தில் மேலும் விரிவு செய்யப்பட்ட சோதனையின்போது மூன்று ஆளில்லா சிறிய ரக வானூர்திகள் கிடைத்தன.
இதேபோல் அமிர்தசரஸ் எல்லையில் உள்ள ரோரன் வாலா கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளிப் பகுதியில் இருந்து மூன்று நவீன ‘டிரோன்’கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்திய எல்லையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினரால் அவை சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கக்கூடும் என எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.


