ஆந்திராவில் 1,592 பேருக்கு உண்ணிக் காய்ச்சல் தொற்று; தமிழகத்திலும் பரவல் அபாயம்

1 mins read
1568f1ff-6374-439c-83b1-ed4dbb7a5c5c
ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் உண்ணிக் காய்ச்சலைப் பரப்பும் பாக்டீரியா. - படம்: சமயம்

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் இதுவரை 1,592 பேர் உண்ணிக் காய்ச்சல் (Scrub Typhus) என்ற நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சித்தூர் மாவட்டத்தில் 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘ஸ்க்ரப் டைபஸ்’ காரணமாக எந்த மரணமும் உறுதிப்படுத்தப்படவில்லை. சந்தேகத்திற்குரிய 9 மரணங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள், பல உறுப்பு செயலிழப்பு காரணமாக ஏற்பட்டவை என ஆய்வு செய்யப்பட்டது.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த நோயைக் கட்டுப்படுத்த, தேசிய அளவிலான நிபுணர்களைக் கொண்ட ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளார். உடனடியாக நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, நோய் பரவுவதற்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

சுகாதாரமற்ற நிலைதான் பல நோய்களுக்கு மூலக் காரணம் என்று கூறிய அவர், தூய்மை குறித்து மக்களிடையே பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தமிழகத்திலும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ (ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகள் கடிப்பதன் மூலம் பரவும்) தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 நாட்களில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் ‘ஸ்க்ரப் டைபஸ்’ அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்படுவதுடன், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்