தடையில்லாச் சான்றிதழ் குறித்து செந்தில் பாலாஜி - நிருபர் மோதல்!

2 mins read
3ee65116-45d3-40a2-8e19-9feb85a79be9
நிருபருடன் வாக்குவாதத்தில் இறங்கிய செந்தில் பாலாஜி. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: செம்மொழிப் பூங்கா விரைவில் திறக்க இருப்பதால் மேற்பார்வையிடச் சென்ற இடத்தில் செய்தியாளர் கேட்ட கேள்வி குறித்து அவருடன் செந்தில் பாலாஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பேசுபொருளாகி இருக்கிறது.

கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், செம்மொழி பூங்கா கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மூலிகைத் தோட்டங்கள், நீரூற்றுக்கள், மலைக் குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள், சிறுவர்கள் விளையாடும் பகுதிகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

செம்மொழிப் பூங்கா பணிகள் நடைபெற்று வரும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் அதிகாரிகள் ஒவ்வொரு பணிகளாக விளக்கிக் கூறினர். அவர்களிடம் பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் செய்து முடிக்கும்படி அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பூங்கா பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

கே.என்.நேரு பேசுகையில், “செம்மொழிப் பூங்கா இறுதிக் கட்டப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் குறிப்பிட்ட தேதிக்குள் செய்து முடிக்கப்படும். பூங்காவை வருகிற புதன்கிழமை 25ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்,” என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், “பாதுகாப்பு அடிப்படையில் செம்மொழிப் பூங்காவுக்கு பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற்று விட்டீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு அமைச்சர் நேரு அமைதி காக்க, செந்தில் பாலாஜி, “முறைப்படி அனுமதி பெறவில்லை என்றால், முதலமைச்சர் திறக்க மாட்டார்,” என்று கூறினார்.

அதன்பிறகு, “அனுமதி வாங்கிவிட்டுத்தான் திறப்போம்,” என்று அமைச்சர் நேரு பதிலளித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர், கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் செந்தில் பாலாஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு அந்தச் செய்தியாளர், “அடிப்படை அறிவு இல்லாமல் கேள்வி எழுப்ப மாட்டோம். எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம்,” என்று கூறி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்த வாக்குவாதத்தால் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு நிலவியது.

குறிப்புச் சொற்கள்