கர்நாடகா: கர்நாடக சட்டசபையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு, கர்நாடக வெறுப்புப் பேச்சு தடுப்பு 2025 என்ற முக்கியமான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
மதம், மொழி, சாதி, பிறப்பிடம், இனம், பாலினம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் வெறுப்புரை மற்றும் வெறுப்புச் செயல்களைக் கட்டுப்படுத்துவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.
சமுதாயத்தில் வெறுப்பைத் தூண்டும் பேச்சு மற்றும் நடத்தை காரணமாக ஏற்படும் உணர்ச்சி, மன, உடல், சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூகத்தில் ஒற்றுமை குன்றுவதற்கான முயற்சிகளைத் தடுக்கவும், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற தளங்களில் பரவும் வெறுப்புரைகளைக் கட்டுப்படுத்தவும் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
பெலகாவி குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, சட்டமாக அமல்படுத்தப்படுவதற்கு சட்டமன்ற மேலவை மற்றும் மாநில ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
வெறுப்புப் பேச்சு குற்றங்களுக்குப் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

