புதுடெல்லி: செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஏழாவது நபரான சாஹிப்பைத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தற்கொலைப் படைத் தாக்குதலை உமர் நபி மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு வரை கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதியன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணை மேற்கொண்டு வருகிறது. கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை ஆறு பேரைக் கைது செய்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள், இன்று மேலும் ஒருவரைக் கைது செய்தனர்.
தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபிக்கு தங்குவதற்கு இடம் கொடுத்ததாக அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை சேர்ந்த சாஹிப் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தற்கொலைப் படைத் தாக்குதலை உமர் நபி மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு வரை கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் தங்கியிருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

